தமிழகம் முழுவதும் ஆளும் திமுகவிற்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுக பல போராட்டங்களை நடத்திவருகிறது.
அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்குவதை கண்டித்து, திருப்பரங்குன்றத்தில் கண்டன அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தார்.

ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது “அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் எந்தவொரு விலை ஏற்றமும் செய்யாமல், மக்களுக்கான திட்டங்களை அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வந்தது. ஆனால், திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது சொத்துவரி, வீட்டு வரியையும், மின்சார கட்டணம் உள்ளிட்ட மக்களுக்கான அனைத்து சேவைகளுக்கும் விலை ஏற்றம் செய்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை முடக்கியுள்ளனர். பாதாள சாக்கடை திட்டம், லோயர் கேம்ப் கூட்டு குடிதீர் திட்டம் முடங்கி உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குவதை மறந்துவிட்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்கி வைத்துள்ளனர்.
நீட் தேர்வு, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்னாச்சு என்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட பிறகுதான் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் குறைவான அளவில் மட்டும் கொடுத்ததார்கள். கேட்டால் தகுதியானவர்களுக்கு கொடுத்தோம் என்கிறார்கள். மக்கள் தகுதி பார்த்து வாக்களித்திருக்க வேண்டும். ஆட்சிக்கு வர பொய்யான வாக்குறுதி கொடுப்பது திமுகவின் வழக்கம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.