கன்னட திரையுலகைத் தாண்டி, தமிழ், தெலுங்கி என்று பலராலும் கொண்டாடப்படும் நபராக மாறியவர்தான் சிவராஜ்குமார். குறிப்பாக, தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். இந்த நிலையில்தான், அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, புற்றுநோய் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க சென்றிருந்தார் சிவராஜ்குமார். அப்படி, தனது குடும்பத்தாரோடு அமெரிக்காவுக்கு பயணமாவதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசிய அவர், என் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. இந்த அன்புக்கு நன்றி. நிச்சயம் மீண்டு வருவேன் என்று எமோஷலானார்.
இதையடுத்து, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கேன்சர் சிகிச்சை மையத்தில், கடந்த டிசம்பர் 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 6 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட சிறுநீர் பை அகற்றப்பட்டு, குடல் பகுதியில் இருந்து செயற்கையாக சிறுநீர் பை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார் மருத்துவர்.

இந்த நிலையில்தான், சிகிச்சை முடிந்து ஒரு வார காலமான பிறகு, உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவராஜ்குமார். அந்த வீடியோவில், புற்றுநோய் பாதிப்பு கண்டிறியப்பட்டபோது அச்சமடைந்தேன். எனினும், ரசிகர்களின் அன்பாலும், கடவுளின் ஆசியாலும் இதில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்பினேன். கடைசியாக நடித்த படத்தில் கீமோ தரப்பியை செய்துகொண்டே நடித்துக்கொடுத்தேன். என் மனைவி கீதாவின் அன்பும் ஆதரவுதான் என்னை வலிமையாக பயணிக்க வைத்தது என்று எமோஷலனாக பேசியுள்ளார் சிவராஜ்குமார்.

சிவராஜ் குமார்எக்ஸ் தளம்
அதே வீடியோவில் பேசிய சிவராஜ்குமாரின் மனைவி கீதா, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்கள் அனைவரது வேண்டுதலாலும், சிவராஜ்குமாரின் மருத்துவ பரிசோதனைகளில் புற்றுநோய் பாதிப்பில் நெகட்டிவ் வந்திருக்கிறது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து அவர் முழுவதுமாக மீண்டுள்ளார். இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த சில வாரங்களுக்கு அமெரிக்காவிலேயே தங்கி சிகிச்சை எடுக்கும் சிவராஜ்குமார், ஜனவரி 26ம் தேதி இந்தியா திரும்ப இருப்பதாக தெரிகிறது.