தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியது போன்ற ஒரு ஆடியோ லீக்கான விவகாரம் அக்கட்சியில் பூதாகரமாக வெடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்ட திட்டமிட்டிருக்கும் விஜய், இன்றைய தினம் அதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படியே ஆலோசனை நடந்து வரும் நிலையில், ஆடியோ லீக்கானதின் எதிரொலியாக ஆலோசனை கூட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையும்தாண்டி, கட்சியைப் பற்றி பல கருத்துகள் பேசப்படுவதால், புது யுக்தியை கையில் எடுத்துள்ளார் விஜய். தவெகவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் சற்று விரிவாக.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு தொடங்கிய விஜய், அடுத்தடுத்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். திரைத்துறையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் இறங்க முடிவெடுத்தவர், தனது கடைசி படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தெரிகிறது. முன்னதாக, 2 மாதங்களுக்கு முன்பாக மாநாட்டை நடத்திய விஜய், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்பிறகு ஒரு பொது நிகழ்வாக அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றாலும், இன்னும் களத்திற்கு வரவில்லையே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கட்சியில் பல அணிகள், 100 மாவட்டச் செயலாளர்கள், தொழிற்சங்கம் என்று அவர் அடுத்தடுத்த பிளானை போட்டு வந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் தேக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு செய்து மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக பட்டியல் கொடுங்கள் என்று பொதுச்செயலாளர் ஆனந்திடம் கேட்டுள்ளார் விஜய். ஆனால், அவர் எதிர்பார்த்த நேரத்தில் பட்டியல் தயாராகததால், ஆனந்தை கடிந்துகொண்ட விஜய், இம்மாத இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை இறுதி செய்ய முடிவெடுத்துள்ளார். தொடர்ந்து, பிப்ரவரி 2ம் தேதி கட்சியின் முதலாம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடிவிட்டு, மார்ச் துவக்கத்தில் இருந்து சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான், தவெகவின் வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தவெக நிர்வாகியோடு அவர் பேசுவதுபோன்று வெளியான ஆடியோவில், விஜய் போன்ற ஒரு Cult Faceஐ ஆனந்த் மழுஙகடிக்க நினைக்கிறார். விஜய்யைத் தாண்டி தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார் என்பனபோன்ற பல விஷயங்கள் அதில் பேசப்பட்டிருந்தன. நிர்வாகிகள் விஜய்யை சந்திக்கவிடாமல் ஆனந்த் முட்டுக்கட்டையாக இருப்பது போன்ற தொணியில் வெளியான ஆடியோ தவெகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆடியோ உண்மையோ, பொய்யோ.. பேசப்பட்ட விஷயங்கள் பேச வேண்டியவைதான். இனி விஜய்யே அனைத்தையும் கையில் எடுத்து களமாட வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம் அவரது கவனத்திற்கு சென்றதே சந்தோஷம் என்றும் பேசப்படுகிறது.
இப்படியான சூழலில்தான், பனையூரில் உள்ள தவெக தலைமை நிலைய அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டச் செயலாளர் என்று சுமார் 100 முதல் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க இருக்கின்றனர். இவை அனைத்தையும் தாண்டி, ஆடியோ லீக்கான விவகாரத்திற்கு விளக்கம் கொடுக்கவே இந்த கூட்டம் என்றும் கூறப்பட்டது. எனினும், கட்சியின் தலைவர் விஜய், சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் களந்துகொள்வதற்காக சென்றதாகவும், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடியுங்கள் என்று ஆனந்திற்கு உத்தரவிட்டு சென்றதாகவும் தெரிகிறது.

இந்த விவகாரத்தில், ஆனந்தின் ஆதிக்கம் குறித்து அறிந்துகொண்ட விஜய், அவரையே நேரில் அழைத்து விளக்கம் கேட்டதாகவும், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எப்படிப்பார்த்தாலும், கட்சிப்பணிகள், நடவடிக்கைகள் கைமீறி செல்லத் துவங்கி இருப்பது விஜய்யின் கவனத்திற்கு சென்று சேர்ந்துள்ளது. இதனால், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை முடிந்த பிறகு, 100 மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அவர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை வழங்க இருக்கிறார் விஜய். முன்னதாகவே, மாநாடு முடிந்த அடுத்த மூன்று நாட்களில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளை அலுவலகத்திற்கு அழைத்த விஜய், அவர்கள் ஒவ்வொருவரோடும் ஆலோசனை நடத்தினார். மாநாடு எப்படி இருந்தது.. உங்கள் பகுதியில் அது ஏற்படுத்திய தாக்கம் எப்படி? மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் முழுமையாக விசாரித்து, கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே ஸ்டைலில் வெகு விரைவில் மாவட்டச் செயலாளர்களை நியமித்துவிட்டு, அனைவரோடும் தனித்தனியாக பேச இருக்கிறார் விஜய். சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அவர் களமிறங்கி இருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகாலமே அவகாசம் இருக்கிறது. இதனால், அடுத்தடுத்த ஆக்ஷன்களை சீக்கிரமாகவே கையில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.